Wednesday, January 25, 2012

வெளிநாட்டு மாப்பிள்ளை!


                 அண்மையில் ஒரு நாள் அலுவலக அரட்டையின் போது சாதாரணமாக அரட்டையில் அரங்கேறிய விடயம்தான் இது இதை சாதாரணமாக அரட்டையோடு மட்டும் விட்டு விட்டு போக எனக்கு மனம் இடங்கொடுக்கவில்லை. அரட்டையில் சாதாரணமாக பல விடயங்கள் அரங்கேறுவதுண்டு அரசியல், சினிமா, வீடு, நண்பர்கள் கல்லூரி வாழ்க்கை என நீண்டு கொண்டு செல்லும் தலைப்புக்கள். ஒருவரை ஒருவர் கிண்டலடித்தல் இதை பொதுவாக நாம் நம் தமிழில் கலாய்த்தல் என்று குறிப்பிடுவதுண்டு. ஒருவரை ஒருவர் கலாய்த்தல், ஒருவரை பலர் சேர்ந்து கலாய்த்தல், குறிப்பிட்ட ஒரு விடயத்துக்கு ஆதரவானதும் எதிரானதுமான கருத்துக்களை முன்வைக்கும் பல வாக்குவாதங்கள், வாதப்பிரதிவாதங்கள் என பல கோணங்களில் நீண்டு கொண்டு செல்லும் நம் அரட்டை.  என்னை பொறுத்தவரையில் சிறிய ஓய்வு நேரத்தில் கிடைக்கும் இந்த அலுவலக அரட்டை என்பது நமக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன். வாய் விட்டு சிரிக்க, நம் மனதில் உள்ள அபிப்பிராயங்களை வெளியிட, பிறரது கருத்துக்களை செவிமடுக்க, பலரது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம்தான் இந்த அரட்டை.
இந்த ஆரோக்கியமான அரட்டையில் சாதாரணமாக மிகச்சாதாரணமாக அலசப்பட்டு வெறும் சிரிப்பொலிகளோடு மட்டுமே ஓய்ந்து போன விடயம்தான் இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை. அதாவது நண்பர் ஒருவரின் கருத்துக்கணிப்பில் இக்கால பெண்கள் எல்லோரும் வெளி நாட்டு மோகத்தில் திளைத்திருப்பவர்களாகவும் சாதாரணமாக ரூபாய்களில் வாழ்ந்து அலுத்துப்போய் டொலர்கலோடும் பவுண்ஸ்களோடும் வாழ ஆசைப்படும் பணப்பேய்களாக மட்டுமே சித்தரிக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியதே! அரட்டையில் இருந்து வந்த சிரிப்பொலிகள் இக் கருத்தை ஆமோதிப்பதாக இருந்தாலும் நண்பர் கருத்தை முன்வைக்கும் போது காட்டிய அபிந‌யமும் நகைச்சுவையான சில சொற்பிரயோகங்களும் மட்டுமே சிரிப்பை உண்டாக்கக்கூடியதாகவும் அவரது கருத்து சிரிப்பைத்தாண்டி சிந்திக்க வேண்டிய விடயமுமாகவே எனக்கு பட்டது!
                  நண்பரது குற்ற‌ச்சாட்டில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதம் உண்மை இருந்தாலும் மிகுதி 75% வருத்தப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.  

"இஞ்ச நாங்கள் அணிலேற விட்ட நாய்மாதிரி ஆவெண்டு பாத்தோண்டிருக்க வெளிநாட்டிலை இருந்து ஒரு சொட்டைத்தலையன் வந்து ஹாய் சொன்னதும் bye சொல்லிட்டு போயிடுறாளுகள்"

                     இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் நிஜத்தில்!!!!?  நான் கடந்து வந்த என் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் என பல பெண்கள் வரதட்சணை என்ற பெயரில் பலிக்கடா ஆக்கப் பட்டிருப்பதுதான் அப்பட்டமான உண்மை. சாதாரணமாக உள்நாட்டில் பெண்ணைக்கட்டிக்கொடுப்பதென்றால் வீடுவாசல், காணி, நிலம், பணம் என தமது சக்திக்கு அப்பால் வரதட்சணை கொடுக்க முடியாத பெற்றோர்களின் ஒரே ஒரு தீர்வு வெளிநாட்டு மாப்பிள்ளை! காரணம் வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் பெரும்பாலானோர் பெருமளவு வரதட்சணையை எதிர்பார்ப்பதில்லை, வீடு, காணி என்பவற்றை வரதட்சணையாக கேட்பதில்லை, ஏன் சில‌பேர் வரதட்சணையே வேண்டாம் பெண்ணை மட்டும் கட்டிக்கொடுத்தால் போதும் என்பவர்களும் இருக்கிறார்கள் இப்படியான சந்தர்ப்பங்களை பெரும்பாலான கையாலாகாத நம் பெற்றோர் கை நழுவ விட விரும்புவது இல்லை. பெற்றோர்களையும் குற்றம் சொல்லிவிட முடியாது, காரணம் அவர்கள் சக்திக்கு மீறி ஒரு காரியத்தை செய்வதென்பது இயலாத காரியமே! இருப்பினும் தங்கள் இயலாமைகளை பெண் பிள்ளைகளின் மீது திணிப்பதென்பது வருத்தப்பட வேண்டியதே! நடுத்தர வர்க்க பெற்றோர்களை பொறுத்தவரையில் பெண்பிள்ளைகள் பெரும்பாலும் பொறுப்புக்களாகவே கருதப்படுகிறார்கள். பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாத நிலையில் அப் பொறுப்பை தீர்த்துக்கட்டுவதற்கு அவர்களுக்கு கிடைக்கும் ஒரே ஒரு ஆதாயம் வெளிநாட்டு மாப்பிள்ளை! மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், சிறிதளவும் விருப்பமில்லை என்றாலும் குடும்பத்தாரின் நச்சரிப்புக்களும், அம்மாவின் கெஞ்சலும், அப்பாவின் பொருளாதாரமும், அண்ணனின் இயலாமையும் தனக்கு கீழே கேள்விக்குறியாய் நீண்டிருக்கும் தங்கையின் வாழ்க்கையும் சமாதானம் சொல்லி சம்மதிக்க வைத்துவிடும் வெளிநாட்டு வாழ்க்கைக்கு! தன் கனவுலகில் இராஜகுமாரியாக முடிசூட்டிக் கொண்டவள் நிஜவுலகில் தன் கனவுகள் சிதைக்கப்பட்டு கண்கள் கட்டப்பட்டு திருமணம் என்ற பெயரால் சாக்கடைக்குள் தள்ளப்படுகிறாள். இன்று நம் நாட்டில் எத்தனை படித்த பெண்கள் கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு  திருமணம் என்னும் சொல்லால் நாடு கடத்தப்படுகிறார்கள் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய மிகப்பெரிய உண்மை.



                    பெண் விடுதலை, பெண் அடிமை, பெண்சுதந்திரம் என பல பேர் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டிருந்தாலும் இன்றும் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டு, சாதாரண விருப்பு வெறுப்புக்கள் கூட மறுக்கப்பட்டு வெறும் கைப்பொம்மைகளாகவே காணப்படும் நம் நாட்டு பெண்கள் எத்தனை பேர்? 
                    நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் என பாடிச்சென்ற பாரதியும் பெண் சுதந்திர‌த்துக்காய் பாடுபட்ட பெரியாரும் இன்று இங்கிருந்தால் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்!

-கறுப்பி-

Sunday, January 22, 2012

நம்பிக்கை!


          நம்பிக்கை என்றால் என்ன? எதை நம்புவது? யாரை நம்புவது? எப்படி நம்புவது? இந்த ஆராட்சிகளுக்கு அப்பால் நம்ப வேண்டும். அடிப்படை நம்பிக்கை என்பது இல்லாத எவராலும் எதையும் இலகுவில் அடைந்துவிட முடியாது. இந்த பூமியில் நம் பிரசவமே நம் தாயின் 10 மாத பொறுமையும் அசராத நம்பிக்கையும்தான்! அத்தனை தோல்விகளையும் இழப்புக்களையும் தாண்டி வாழ்ந்து கொண்டும் செத்துக்கொண்டும் இருக்கும் நம் மனிதம் நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் என்றோ மண்ணோடு மண்ணாய் மரித்துப்போயிருக்கும்!
         ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை என்பது இன்று எவரிடமும் இல்லை கணவன் மனைவியையோ மனைவி கணவனையோ நம்புவதில்லை, நண்பர்களுக்கிடையே நல்ல நம்பிக்கை இல்லை, பெற்றோர் பிள்ளைகளை நம்புவதில்லை பிள்ளைகள் பெற்றோரை நம்புவதில்லை! ஆக, நம் உறவுகளுக்கிடையே நடந்து கொண்டிருப்பது வெறும் நடிப்பு மட்டுமே! பரஸ்பரம் தங்களுக்கிடையே வெறும் நடிப்பை மட்டுமே பரிமாறிக் கொண்டிருக்கும் உறவு முறைகளை உறவு முறைகள் என்று ஏற்றுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது! நம்பிக்கை இல்லாத இடம் வெறும்  நரகமே! நரகம் மட்டுமே!
           பிறரை நம்புவதில் சில பல சிக்கல்கள் உண்டுதான் இருந்தாலும் நம்புங்கள். அது நமக்கு சதகமானது என்று நம்புங்கள். கடவுளை நாம் யாரும் கண்டதில்லையே! இருந்தும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறோமே அந்த நம்பிக்கைதான் நமக்கெல்லாம் கடவுள்!
        இந்த நம்பிக்கையை பற்றி பெரும் சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்கள் ஒரு அருமையான கதை சொன்னார் என்னவென்றால், ஒரு ஊரில் மழையே இல்லாமல் வறட்சி தலை விரித்தாடியதாம் ஊரில் உள்ளவர்களெல்லாம் சேர்ந்து மழை வேண்டி பிரார்த்தனை கூட்டம் ஒன்றை நடத்த முடிவுசெய்து நடத்திக்கொண்டு இருந்தார்கள் எல்லோரும் வெறுங்கையை வீசிக்கொண்டு வந்தனர். பிஞ்சுப்பிள்ளை மட்டும் கையில் குடையுடன் வந்தது பிரார்த்தனை முடிந்ததும் மழை வரும் என்கிற அந்த பிஞ்சுப் பிள்ளை மனதில் முழை விட்ட நம்பிக்கை கடவுளையே யோசிக்க வைத்தது! அவ நம்பிக்கை உள்ள ஆயிரம் பேரை தண்டிப்பதை விட நம்பிக்கை உடைய ஒரு குழந்தைக்காக மழை பெய்விப்பது தன் கடமை என்பதை கடவுள் புரிந்து கொண்டார்.
நம்புங்கள்! நம்பினோர் கெடுவதில்லை! நம்பிக்கைதான் வாழ்க்கை!!!

-கறுப்பி-

Wednesday, January 18, 2012

காலப்பெருவெளியில்...

                                  தொலைந்து போய்விட்ட இந்த தசாப்தங்களினிடையே நாம் தொலைத்தவை இழந்தவை, பெற்றவை என்பவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் நம் வாழ் முறையின் எச்சங்கள் எவை? நமக்காக இன்னும் மீதமுள்ளவை எவை? நாம் தொலைத்துவிட்ட சந்தோசங்கள் தொடருகின்ற துயரங்கள் என எதையோ ஒன்றை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்த மனித வாழ்முறையின் இலக்கு என்ன?
                                  இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நம் மனித பயணத்தில் எத்தனை மனங்கள் சாகடிக்கப்பட்டன? மனிதங்கள் தொலைக்கப்பட்டன? 
                                    இறுதியில் இந்த வாழ்முறை பெறுமதிக்குரியதா? இல்லை வெறும் பூச்சியம்தானா????


தொடர்வோம்..........